மக்கள் அதிகமாக கூடுவதை கட்டுப்படுத்த மகா சிவராத்திரி விழா ‘ஆன்லைன்’ மூலம் நடக்கிறது; ஈஷா யோகா மையம் அறிவிப்பு!!

அதிகப்படியான மக்கள் கூடுவதை கட்டுப்படுத்த மகா சிவராத்திரி விழா இந்த ஆண்டு ‘ஆன்லைன்’ வாயிலாக நடத்தப்பட உள்ளது. ஆதியோகி மற்றும் தியானலிங்கம் வருகிற 8-ந்தேதி முதல் 11-ந்தேதி வரை தற்காலிகமாக மூடப்பட்டு இருக்கும்.
மகா சிவராத்திரி விழா
கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்தில் மிக பிரமாண்டமாக நடக்கும் மகா சிவராத்திரி விழா இந்த ஆண்டு ‘ஆன்லைன்’ (இணையதளம்) வாயிலாக நடத்தப்பட உள்ளது. அரசின் வழிகாட்டுதல்படி, அதிகப்படியான மக்கள் கூடுவதை கட்டுப்படுத்துவதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே முன்பதிவு செய்த மிக குறைவான எண்ணிக்கையிலான மக்கள் மட்டுமே இந்த ஆண்டு விழாவில் நேரில் பங்கேற்க முடியும். மேலும் அவர்கள் கொரோனா பரிசோதனை மேற்கொண்டு அதன் அறிக்கையை சமர்ப்பிப்பதை கட்டாயமாக்கி உள்ளோம்.
ஆதியோகி, தியானலிங்கம் மூடல்
மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்துவதற்காகவும், சமூக இடைவெளியை பின்பற்றுவதற்காகவும், பங்கேற்பாளர்கள் ஆழ்ந்த தியான அனுபவத்தை பெறுவதற்காகவும் நேரில் பங்கேற்பவர்களுக்கு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மற்றவர்கள் அனைவரும் தொலைக்காட்சி மற்றும் சமூக வலைத்தளங்களின் மூலம் இலவசமாக கலந்து கொள்ளலாம்.
மகாசிவராத்திரி விழாவையொட்டி, ஆதியோகி மற்றும் தியானலிங்கம் வருகிற 8-ந்தேதி (நாளை) முதல் 11-ந்தேதி வரை தற்காலிகமாக மூடப்பட்டு இருக்கும். ஆகவே பொதுமக்கள் அந்த நாட்களில் ஈஷாவுக்கு வருவதை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறோம். வருகிற 12-ந்தேதி காலை 10.30 மணி முதல் ஆதியோகிக்கு பொதுமக்கள் வழக்கம்போல் அனுமதிக்கப்படுவார்கள்.

மேற்கண்ட தகவல் ஈஷா யோகா மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.