எடப்பாடி பழனிசாமி-ஓ.பன்னீர்செல்வம் முன்னிலையில் ஒரே கட்டமாக நடந்த அ.தி.மு.க. வேட்பாளர் நேர்காணல்

எடப்பாடி பழனிசாமி-ஓ.பன்னீர்செல்வம் முன்னிலையில் அ.தி.மு.க. வேட்பாளர் நேர்காணல் ஒரே கட்டமாக நேற்று நடந்தது. விரைவில் பட்டியல் வெளியாகிறது.பதிவு: மார்ச் 05,  2021 10:52 AMசென்னை, 
தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ந்தேதி நடைபெறுகிறது. தேர்தலையொட்டி அ.தி.மு.க. சார்பில் கடந்த மாதம் 24-ந்தேதி வேட்பாளர்கள் விருப்பமனு வினியோகம் தொடங்கி, நேற்று முன்தினத்துடன் முடிவடைந்தது. இதில் 8 ஆயிரத்து 200-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் கட்சியினரிடம் இருந்து பெறப்பட்டன.

இதையடுத்து அ.தி.மு.க. வேட்பாளர் நேர்காணல் நிகழ்ச்சி 4-ந்தேதி ஒரே கட்டமாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் அ.தி.மு.க. வேட்பாளர் நேர்காணல் நேற்று காலை 9 மணிக்கு தொடங்கியது. இதில் அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி, ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, ஆர்.வைத்திலிங்கம், அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் அ.தமிழ் மகன் உசேன், செய்தி தொடர்பாளர் பா.வளர்மதி, மருத்துவரணி செயலாளர் டாக்டர் பி.வேணுகோபால் உள்பட நிர்வாகிகள் அடங்கிய ஆட்சி மன்ற குழு, தேர்தலில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்தவர்களுடன் நேர்காணல் நடத்தியது.
இந்த ஒருங்கிணைந்த வேட்பாளர் நேர்காணல் நிகழ்ச்சி காலை, மாலை என இரு பிரிவுகளாக நடத்தப்பட்டது. இந்த வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்றவர்கள் செல்போன் கொண்டு செல்லக்கூடாது என்றும், முக கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டிருந்தது.
கன்னியாகுமரி, மதுரை
அதன்படி, முதல் பிரிவாக கன்னியாகுமரி கிழக்கு, கன்னியாகுமரி மேற்கு, தூத்துக்குடி வடக்கு, தூத்துக்குடி தெற்கு, நெல்லை மாவட்டங்களுக்கு நேர்காணல் நடத்தப்பட்டது. அ.தி.மு.க. டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம், திரைப்பட இயக்குனர் நாஞ்சில் பி.சி.அன்பழகன், மாவட்ட செயலாளர்கள் ஜான் தங்கம், அசோகன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
அதனைத்தொடர்ந்து 2-ம் பிரிவாக தென்காசி வடக்கு, தென்காசி தெற்கு, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் கிழக்கு, விருதுநகர் மேற்கு மாவட்டங்களுக்கும், 3-ம் பிரிவாக திண்டுக்கல் கிழக்கு, திண்டுக்கல் மேற்கு, தேனி, மதுரை மாநகர், மதுரை புறநகர் கிழக்கு, மதுரை புறநகர் மேற்கு மாவட்டங்களுக்கும் நேர்காணல் நடந்தது. அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். 4-ம் பிரிவாக திருவாரூர், மயிலாடுதுறை, நாகை, தஞ்சாவூர் வடக்கு, தஞ்சாவூர் தெற்கு மாவட்டங்களுக்கு நேர்காணல் நடந்தது.


புதுக்கோட்டை, கோவை
5-ம் பிரிவாக புதுக்கோட்டை வடக்கு, புதுக்கோட்டை தெற்கு, நாமக்கல், ஈரோடு மாநகர், ஈரோடு புறநகர் நீலகிரி மாவட்டங்களுக்கு நேர்காணல் நடந்தது. அமைச்சர்கள் டாக்டர் சி.விஜயபாஸ்கர், கே.ஏ.செங்கோட்டையன் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர். 6-ம் பிரிவாக கோவை மாநகர், கோவை புறநகர் வடக்கு, கோவை புறநகர் தெற்கு, திருப்பூர் மாநகர், திருப்பூர் புறநகர் கிழக்கு, திருப்பூர் புறநகர் மேற்கு மாவட்டங்களுக்கும், 7-ம் பிரிவாக சேலம் மாநகர், சேலம் புறநகர், தர்மபுரி, கிருஷ்ணகிரி கிழக்கு, கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டங்களுக்கும் நேர்காணல் நடந்தது. இதில் சபாநாயகர் பி.தனபால் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
அதனைத்தொடர்ந்து உணவு இடைவேளை விடப்பட்டது. பிற்பகல் 3 மணிக்கு வேட்பாளர் நேர்காணல் மீண்டும் தொடங்கியது.
கரூர், கடலூர், சென்னை
அதன்படி பிற்பகலில் 8-ம் பிரிவாக கரூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சி மாநகர், திருச்சி புறநகர் வடக்கு, திருச்சி புறநகர் தெற்கு மாவட்டங்களுக்கும், 9-ம் பிரிவாக வேலூர் மாநகர், வேலூர் புறநகர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களுக்கும், 10-ம் கட்டமாக விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் கிழக்கு, கடலூர் மத்தியம், கடலூர் மேற்கு மாவட்டங்களுக்கும், 11-ம் பிரிவாக காஞ்சீபுரம், செங்கல்பட்டு கிழக்கு, செங்கல்பட்டு மேற்கு, திருவண்ணாமலை வடக்கு, திருவண்ணாமலை தெற்கு மாவட்டங்களுக்கும், 12-ம் பிரிவாக திருவள்ளூர் வடக்கு, திருவள்ளூர் மத்தியம், திருவள்ளூர் தெற்கு, திருவள்ளூர் கிழக்கு, திருவள்ளூர் மேற்கு மாவட்டங்களுக்கும்,
13-ம் பிரிவாக வடசென்னை வடக்கு (கிழக்கு), வட சென்னை வடக்கு (மேற்கு), வட சென்னை தெற்கு (கிழக்கு), வட சென்னை தெற்கு (மேற்கு) மாவட்டங்களுக்கும், 14-ம் பிரிவாக தென்சென்னை வடக்கு (கிழக்கு), தென் சென்னை வடக்கு (மேற்கு), தென் சென்னை தெற்கு (கிழக்கு), தென் சென்னை தெற்கு (மேற்கு), சென்னை புறநகர் மாவட்டங்களுக்கும், 15-வது மற்றும் இறுதிப்பதிவாக புதுச்சேரி, கேரளா மாநிலங்களுக்கும் நேர்காணல் நடந்தது.
விரைவில் வேட்பாளர் பட்டியல்
காலை 9 மணிக்கு தொடங்கிய இந்த நேர்காணல் இரவு 8.30 மணிக்கு முடிவடைந்தது. அதனைத்தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் உள்பட ஆட்சி மன்றக்குழு நிர்வாகிகள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.
வேட்பாளர் நேர்காணல் நிகழ்வு முடிந்தநிலையில், விரைவில் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட இருக்கிறது. அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் தொகுதி பங்கீடு நிறைவுபெற்ற உடனேயே அ.தி.மு.க.வின் வேட்பாளர் பட்டியல் வெளியாகும் என கூறப்படுகிறது.
அ.தி.மு.க. வரலாற்றிலேயே ஒரே நாளில் கட்சி ரீதியான உள்ளடங்கிய அனைத்து மாவட்டங்களுக்கும் அதாவது அனைத்து தொகுதிகளுக்கும் வேட்பாளர் தேர்வு நடத்தி முடித்தது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

#MrChe #மிஸ்டர்சே

                                                                                                              புதுக்கோட்டை மாவட்ட செய்திகளை உடனே அறிந்து கொள்ள

Whatsapp link-https://chat.whatsapp.com/DJBg7Ana7w9AnraDGuL44K

Facebook Link- https://www.facebook.com/groups/PudukaiNews/

Twitter Link – https://twitter.com/PudukaiNews?s=08

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *