விஜய் ஹசாரே டிராபி: திரிபுராவை வீழ்த்தியது தமிழகம்

சென்னை: விஜய் ஹசாரே டிராபி ஒருநாள் போட்டித் தொடரின் சி பிரிவு லீக் ஆட்டத்தில், தமிழக அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் திரிபுரா அணியை வீழ்த்தியது. ஐஐடி கெம்பிளாஸ்ட் மைதானத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாசில் வென்று பேட் செய்த திரிபுரா அணி 46.4 ஓவரில் 196 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. ஸ்மித் பட்டேல் அதிகபட்சமாக 60 ரன் (72 பந்து, 11 பவுண்டரி), நினத் கடம் 31, பிரவிஷ் ஷெட்டி 20, அபிஜித் சர்கார் 24, ராணா தத்தா 18 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர். தமிழக பந்துவீச்சில் டேவிட்சன் 3, ரகில் ஷா, வாஷிங்டன் சுந்தர், வருண் சக்ரவர்த்தி தலா 2, முகமது 1 விக்கெட் வீழ்த்தினர்.

அடுத்து 50 ஓவரில் 197 ரன் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய தமிழக அணி, 31.2 ஓவரிலேயே 2 விக்கெட் இழப்புக்கு இலக்கை எட்டியது. ஜெகதீசன் 40, முரளி விஜய் 5 ரன்னில் பெவிலியன் திரும்பினர். அதிரடியாக சதம் விளாசிய அபினவ் முகுந்த் 131 ரன் (100 பந்து, 13 பவுண்டரி, 6 சிக்சர்), இந்திரஜித் 18 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். தமிழக அணி 4 புள்ளிகளை தட்டிச் சென்றது. சி பிரிவில் ஹரியானா (22), ஜார்க்கண்ட் (22), தமிழகம் (20), சர்வீசஸ் (20), குஜராத் (18) அணிகள் முதல் 5 இடங்களில் உள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *