தொழிலதிபர் ரன்வீர்ஷாவின் ஆடை ஏற்றுமதி நிறுவனத்தில் 5 பழங்கால சிலைகளை பறிமுதல்

சென்னை: சென்னையில் தொழிலதிபர் ரன்வீர்ஷாவின் ஆடை ஏற்றுமதி நிறுவனத்தில் சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசார் நடத்திய சோதனையில் பல சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

சிலை கடத்தல் வழக்கில் தலைமறைவாகியுள்ள தொழிலதிபர் ரன்வீர்ஷாவுக்கு சொந்தமான சென்னை கிண்டியில் உள்ள அலுவலகத்தில், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் இன்று சோதனை நடத்தினர். இதில், அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த மரத்தினால் ஆன தொன்மையான கலைநயமிக்க 5 பழங்கால சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இரண்டு ரிஷப வாகனம்,ஒரு கஜ
வாகனம்,சிம்ம வாகனம்,கருட வாகனம்,பள்ளியறை தொட்டில் ஆகியவற்றை மீட்டனர்.

அண்மையில், ரன்வீர் ஷாவுக்கு சொந்தமான இடங்களில் நடந்த சோதனையில், 200க்கும் மேற்பட்ட சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டன. அவரது தோழி கிரண் ராவுக்கு சொந்தமான இடங்களிலும் சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதையடுத்து, தலைமறைவாகியுள்ள இருவரும் முன் ஜாமின் கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளனர்.

இந்நிலையில், ரன்வீர் ஷாவுக்கு சொந்தமான இடங்களில் கைப்பற்றப்பட்ட சிலைகளுக்கு உரிய ஆவணங்கள் எதுவும் இல்லை எனவும், ரன்வீர் ஷா, கிரண் ராவை கைது செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளதாகவும் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவினர் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *