இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் மோதும் முதல் டெஸ்ட் இன்று தொடக்கம்: ராஜ்கோட்டில் பலப்பரீட்சை

Share on

ராஜ்கோட்: இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி, ராஜ்கோட் சவுராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் இன்று காலை 9.30க்கு தொடங்குகிறது. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி 2 டெஸ்ட், 5 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் போட்டி ராஜ்கோட்டில் இன்று தோடங்குகிறது. சமீபத்தில் இங்கிலாந்து சென்று விளையாடிய டெஸ்ட் தொடரில் இந்தியா 1-4 என்ற கணக்கில் படுதோல்வி அடைந்ததால், சொந்த மண்ணில் வெற்றிகளைக் குவிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. கடந்த 9 மாதங்களில் வெளிநாடு சென்று விளையாடிய இரண்டு டெஸ்ட் தொடர்களிலும் (தென் ஆப்ரிக்கா, இங்கிலாந்து) மண்ணைக் கவ்வியுள்ளது விமர்சிக்கப்பட்டு வரும் நிலையில், இந்திய வீரர்கள் கடும் நெருக்கடியை எதிர்கொள்கின்றனர். அடுத்த மாதம் மிகக் கடினமான ஆஸ்திரேலிய சுற்றுப்பயணமும் காத்திருக்கிறது.

இந்த நிலையில், ஆசிய கோப்பை ஒருநாள் போட்டித் தொடரில் ஓய்வளிக்கப்பட்டிருந்த விராத் கோஹ்லி மீண்டும் கேப்டன் பொறுப்பேற்று அணியை வழி நடத்த உள்ளார். அனுபவ தொடக்க வீரர்கள் முரளி விஜய், ஷிகர் தவான் நீக்கப்பட்டுள்ள நிலையில், லோகேஷ் ராகுலுடன் இணைந்து அறிமுக வீரர் பிரித்வி ஷா இன்னிங்சை தொடங்குகிறார். புஜாரா, கோஹ்லி, ரகானேவுடன் இளம் விக்கெட் கீப்பர் ரிஷப் பன்ட்டும் பேட்டிங் வரிசைக்கு வலு சேர்க்கிறார். ஓவல் டெஸ்டில் பன்ட் 114 ரன் விளாசியது குறிப்பிடத்தக்கது. ஐந்து ஸ்பெஷலிஸ்ட் பந்துவீச்சாளர்களுடன் களமிறங்க உள்ளதால், இங்கிலாந்து தொடரில் ஹர்திக் பாண்டியாவுக்கு பதிலாக களமிறங்கி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஹனுமா விஹாரி களமிறங்கும் வாய்ப்பு இல்லை. மூன்று வேகம், 2 சுழல் என்ற வியூகத்தை கோஹ்லி தேர்வு செய்தால் ஷர்துல் தாகூர் அறிமுகமாகலாம்.

புவனேஷ்வர், பூம்ராவுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளதுடன் இஷாந்த் ஷர்மா காயம் அடைந்துள்ளதால் முகமது ஷமி, உமேஷ் யாதவ் மீதான நெருக்கடி அதிகரித்துள்ளது. அஷ்வின், ஜடேஜா சுழல் கூட்டணி கோஹ்லியின் முக்கிய துருப்புச் சீட்டாக இருக்கும். ஆடுகளம் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும் என தெரிந்தால், மூன்றாவது ஸ்பின்னராக குல்தீப் இடம் பெறுவார். ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் நம்பர் 1 இடத்தில் உள்ள இந்திய அணிக்கு, 8வது இடத்தில் உள்ள வெஸ்ட் இண்டீஸ் பெரிய அச்சுறுத்தலாக இல்லாவிட்டாலும் ஜேசன் ஹோல்டர் தலைமையிலான அந்த அணி கடைசி வரை போராடும் முனைப்புடன் உள்ளது. 15 வீரர்களில் 5 பேர் மட்டுமே இந்திய மண்ணில் டெஸ்ட் போட்டியில் விளையாடிய அனுபவம் உள்ளவர்கள்.  கெமார் ரோச் இல்லாத நிலையில், இளம் வேகங்கள் ஷெர்மான் லூயிஸ், கீமோ பால் பந்துவீச்சு இந்திய பேட்ஸ்மேன்களை நிச்சயம் சோதிக்கும். வாரியத் தலைவர் லெவன் அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் சதம் விளாசிய சுனில் அம்ப்ரிஸ், கிரெய்க் பிராத்வெய்ட், ஷாய் ஹோப், டோவ்ரிச் ஆகியோர் ரன் குவிக்க காத்திருக்கிறார்கள்.

இரு அணிகளுமே தொடரை வெற்றியுடன் தொடங்க வரிந்துகட்டுவதால், இப்போட்டி மிகவும் விறுவிறுப்பாக அமையும் என எதிர்பார்க்கலாம்.
இந்தியா: விராத் கோஹ்லி (கேப்டன்), கே.எல்.ராகுல், செதேஷ்வர் புஜாரா, அஜிங்க்யா ரகானே, ரிஷப் பன்ட் (விக்கெட் கீப்பர்), ஆர்.அஷ்வின், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், முகமது ஷமி, உமேஷ் யாதவ், ஷர்துல் தாகூர்.

வெஸ்ட் இண்டீஸ்: ஜேசன் ஹோல்டர் (கேப்டன்), சுனில் அம்ப்ரிஸ், தேவேந்திர பிஷூ, கிரெய்க் பிராத்வெய்ட், ரோஸ்டன் சேஸ், ஷேன் டோவ்ரிச், ஷேனான் கேப்ரியல், ஜாமர் ஹாமில்டன், ஷிம்ரோன் ஹெட்மயர், ஷாய் ஹோப், ஷெர்மான் லூயிஸ், கீமோ பால், கியரன் பாவெல், கெமார் ரோச், ஜோமெல் வாரிகன்.

நேருக்கு நேர்…
* இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகளிடையே இதுவரை நடந்துள்ள 94 டெஸ்டில்… வெஸ்ட் இண்டீஸ் 30 போட்டியிலும், இந்தியா 18 போட்டியிலும் வென்றுள்ளன. 46 போட்டிகள் டிராவில் முடிந்துள்ளன.
* இந்திய மண்ணில் நடந்த 45 டெஸ்டில்… வெஸ்ட் இண்டீஸ் 14 போட்டியிலும், இந்தியா 11 போட்டியிலும் வென்றுள்ளன (20 டிரா).
* சுனில் கவாஸ்கர் அதிகபட்சமாக 2749 ரன் மற்றும் 13 சதம் விளாசி முதலிடம் வகிக்கிறார்.
* விக்கெட் வேட்டையில் இந்தியாவின் கபில் தேவ் 89 விக்கெட் வீழ்த்தி முதலிடத்தில் உள்ளார்.
* அதிக முறை 5 விக்கெட் கைப்பற்றிய பவுலர்கள் பட்டியலில் வெஸ்ட் இண்டீசின் மால்கம் மார்ஷல் முதலிடம் வகிக்கிறார் (6 முறை).


Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *