28 மார்ச் 2024
என்னோட அடுத்த டார்கெட் ரியல் எஸ்டேட்.. முகேஷ் அம்பானியின் புது பிசினஸ்!

என்னோட அடுத்த டார்கெட் ரியல் எஸ்டேட்.. முகேஷ் அம்பானியின் புது பிசினஸ்!

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் (Reliance Industries) குழுமத் தலைவர் முகேஷ் அம்பானி (Mukesh Ambani) தற்போது ரியல் எஸ்டேட் (Real estate) தொழிலில் இறங்குவதற்கு முடிவு செய்து அதற்கான பணிகளையும் தொடங்கிவிட்டார்.

தொழிலதிபரும், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் தலைவருமான முகேஷ் அம்பானி இந்தியாவில் மட்டுமல்லாமல் ஆசியாவிலேயே மிகப்பெரிய பணக்காரராக இருந்து வருகிறார். மேலும், உலக பணக்காரர்கள் பட்டியலில் இப்போது 11ஆவது இடத்தில் இருக்கிறார்.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமம் ஏற்கெனவே கச்சா எண்ணெய் சுத்திகரிப்பில் தொடங்கி ஜியோ, ரீடெய்ல் உள்பட பல்வேறு தொழில்களை செய்து வருகிறது. மேலும் சோலார் மின்சக்தி, ஹைட்ரோஜன் எரிசக்தி போன்ற புதிய தொழில்களிலும் கவனம் செலுத்தி வருகிறது.

கடந்த ஆண்டு நடைபெற்ற ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ஆண்டு பொதுக் கூட்டத்தில் FMCG தொழிலிலும் ரிலையன்ஸ் களமிறங்குவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதன்படி, குறைந்த விலையில் தரமான பொருட்களை விற்பனை செய்யப்போவதாக ரிலையன்ஸ் அறிவித்தது.

இதுமட்டுமல்லாமல், பல்வேறு புதுப்புது தொழில் துறைகளில் கால் பதிப்பதற்கு ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. இந்த சூழலில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமம் முதல்முறையாக ரியல் எஸ்டேட் தொழிலிலும் களமிறங்க நடவடிக்கைகளை தொடங்கிவிட்டது.

இதற்காக ரிலையன்ஸ் எஸ்ஓயு (Reliance SOU Ltd,) என்ற நிறுவனத்தையும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமம் தொடங்கியுள்ளது. இந்த ரிலையன்ஸ் எஸ்ஓயு நிறுவனம் முழுக்க முழுக்க ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்துக்கு சொந்தமானதாகும்.

ஆரம்பகட்டமாக இந்த ரிலையன்ஸ் எஸ்ஓயு நிறுவனத்தில் 1 லட்சம் ரூபாயை ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமம் முதலீடு செய்துள்ளது. இந்நிறுவனம் ரியல் எஸ்டேட் சொத்துகளை கட்டமைத்து வர்த்தக ரீதியில் விற்பனை செய்ய இருக்கிறது. இதனால், மற்ற முன்னணி ரியல் எஸ்டேட் நிறுவனங்களுக்கு ரிலையன்ஸ் கடும் போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.