பதிவுச் சான்றுக்கு மாறாக ஆம்னி பேருந்துகளில் மாற்றம் செய்து இயக்கினால் 6 மாத சிறை தண்டனை: போக்குவரத்து ஆணையர் எச்சரிக்கை!!

சென்னை

விதிகளை மீறி ஆம்னி பேருந்துகளில் மாற்றம் செய்தால் 6 மாத சிறை தண்டனை விதிக்கப்படும் என தமிழக போக்குவரத்துத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக தமிழக போக்குவரத்து ஆணையர் தென்காசி எஸ்.ஜவஹர் நேற்று வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஆணையரகத்தில் ஆம்னி பேருந்துகள் பதிவுச் சான்றுக்கு புறம்பாக வாகனத்தில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு இயக்கப்படுவதாக புகார்கள் வந்துள்ளன. அதிலும் குறிப்பாக, வாகனத்தின் நீளம், அகலம், உயரம், எடை, இருக்கை, படுக்கை அமைப்பு மற்றும் அவற்றின் எண்ணிக்கை உள்ளிட்ட மாற்றங்கள் குறித்தான புகார்கள் அதிக அளவில் வந்த வண்ணம் உள்ளன.

எனவே, ஆம்னி பேருந்து வாகன உரிமையாளர்கள் புதிய பதிவு மற்றும் மறுபதிவு செய்த பொழுது, பதிவுச் சான்றில் எவ்வாறு இருந்ததோ அவ்வாறே பேருந்துகளை இயக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. இதை மீறி மாற்றங்கள் செய்து இயக்கினால் மத்திய மோட்டார் வாகனச் சட்டம் 1988, பிரிவு 52 மற்றும் பிரிவு 182 (4)-ன் கீழ் சம்பந்தப்பட்ட வாகன உரிமையாளருக்கு 6 மாத சிறை தண்டனை அல்லது ஒவ்வொரு மாற்றத்துக்கும் ரூ.5 ஆயிரம் அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும்.

மேலும் மத்திய மோட்டார் வாகனச் சட்டம் 1988, பிரிவு 207 மற்றும் தமிழ்நாடு மோட்டார் வாகன விதிகள் 1989, விதி எண் 421-ன்படி வாகனம் சிறைபிடிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

MrChe #மிஸ்டர்சே

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள

Facebook Link – https://www.facebook.com/groups/Mr.CheNews


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *