கோவை அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா தடுப்பூசி போடும் மையம் மூடப்பட்டு உள்ளது. இதனால் பொதுமக்கள் ஏமாற்றம் !!

கோவை,
தமிழகம் உள்பட நாடு முழுவதும் கொரோனாவில் இருந்து மக்களை பாதுகாக்கும் வகையில் கோவேக்சின், கோவிஷீல்டு ஆகிய 2 தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டன. இந்த தடுப்பூசிகள் போடும் பணி ஜனவரி மாதம் 16-ந் தேதி தொடங்கியது. முதல்கட்டமாக சுகாதார பணியாளர்கள் மற்றும் கொரோனா தடுப்பு முன்களப்பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. அடுத்த கட்டமாக 60 வயதை கடந்த முதியவர்கள், இணை நோய்களை கொண்ட 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கடந்த மார்ச் மாதம் 1-ந் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள் முதியவர்களிடையே முதலில் ஆர்வம் இல்லாமல் இருந்து வந்தது.
முதியவர்கள் ஆர்வம்:
தற்போது கொரோனா 2-வது அலை வீசத்தொடங்கி உள்ளது. இதனால் முதியவர்கள் ஆர்வமுடன் தடுப்பூசி போட்டுக்கொள்ள முன்வந்தனர். இதையொட்டி கடந்த 1-ந் தேதியில் இருந்து 45 வயதுக்கு மேல் உள்ள அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
அதன்படி, கோவை அரசு ஆஸ்பத்திரி, இ.எஸ்.ஐ.ஆஸ்பத்திரி, சீதாலட்சுமி ஆரம்ப சுகாதாரநிலையம் உள்பட 20-க்கும் மேற்பட்ட இடங்களில் இலவசமாக கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
.
தடுப்பூசி போடும் மையம்:
கோவிஷீல்டு என்ற தடுப்பூசியை விட கோவேச்சின் தடுப்பூசியை பொதுமக்கள் கேட்டு போட்டுக்கொண்டனர். மேலும் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது. இதனால் கோவை அரசு ஆஸ்பத்திரி, இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரி, அரசு ஆரம்ப சுகாதாரநிலையங்களுக்கு பொதுமக்கள் ஆர்வத்துடன் சென்று கொரோனா தடுப்பூசியை செலுத்திக்கொண்டனர். இதனால் கோவை அரசு ஆஸ்பத்திரி உள்பட கொரோனா தடுப்பூசி போடும் மையங்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது.
கடும் தட்டுப்பாடு:

இந்த நிலையில், கோவை அரசு ஆஸ்பத்திரி, இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரி, அரசு ஆரம்ப சுகாதாரநிலையங்களில் கொரோனா தடுப்பூசிக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. இதனால் கோவை அரசு ஆஸ்பத்திரியில் உள்ள கொரோனா தடுப்பூசி போடும் மையம் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி நேற்று காலை திடீரென்று பூட்டுப்போட்டு மூடப்பட்டது. இதனால் அங்கு தடுப்பூசி போட்டுக்கொள்ள வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச்சென்றனர். ஆனால் இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் நேற்று 2-வது டோஸ் தடுப்பூசி போட்டுக்கொள்ள வந்தவர்களுக்கு மட்டும் அனுமதிக்கப்பட்டு, தடுப்பூசி போடப்பட்டது.
சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியது:
நடவடிக்கை எடுக்கப்படும்:
கோவை மாவட்டத்தில் இதுவரை 2 லட்சத்து 8 ஆயிரத்து 608 பேர் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டனர். கடந்த 2-ந் தேதி மட்டும் ஒரே நாளில் 7,285 பேர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டனர். அதிகமானோர் தடுப்பூசி போட்டுக்கொள்ள வந்ததால் கொஞ்சம் தட்டுப்பாடு ஏற்பட்டது.
தற்போது மாநில சுகாதாரத்துறையிடம் கூடுதலாக தடுப்பூசிகள் கேட்கப் பட்டு உள்ளது. நாளை (திங்கட்கிழமை) கோவைக்கு தடுப்பூசி கொண்டு வரப்படும். அதன்பிறகு வழக்கம்போல் கொரோனா தடுப்பூசி போடப்படும். தட்டுப்பாடு இன்றி தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
#MrChe #மிஸ்டர்சே
கோவை மாவட்ட செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
Whatsapp Link – https://chat.whatsapp.com/HOcPueJhE47BZZ4JT9jA6y
Facebook Link – https://www.facebook.com/groups/KovaiDistrictNews/